அன்பெடுத்து அம்பு செய்து
ஆழமாய் தைத்தாய்.
அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?
ஓட்டை விழுந்த இதயத்தின்
ஒழுகும் குருதியை உன்
ஒற்றை முத்தத்தில்
உதடுகளுக்கு சாயம் பூசுவாய்.
துடிக்கும் இதயத்தை துப்பட்டாவால்
துடைத்துக் கட்டுவாய்.
அமில மழையில் அல்லாடும்
அக்கினி பறவையின் சிறகு வாங்கி
ஆறாத காயம் ஆற்றுவாய் .
வளையல்கள் நொறுக்கி
கொலுசு மணிகளை குலுக்கி
இதயத்தின் இட வலது
இருபக்கமும்
இறுக்கிக் கட்டி எந்நேரமும்
இனிமையாய் இம்சிப்பாய்.
பேசா இதயத்தை உன்
பெயர் மட்டும் பேசும்
பேதையாக்குவாய்.
ஒவ்வொரு பகலின்
ஆரம்பத்திலோ,
அல்லது இரவின்
தொடக்கத்திலோ
தூக்கம் என்ற ஒன்றை
தொல்லையாக்குவாய்.
சேற்றுக்குள் புதைந்திருக்கும்
கலப்பை போல என்
சோற்றுக்குள் புதைந்து கொண்டு
தொண்டைகுழியில் குத்துவாய்.
உன் வியர்வை துளியை
விலைக்கு கேட்கவும்
கண்ணீர் துளியை
தொலைக்க கேட்கவும்
செய்வாய்.
கண்விழிக்க கனவு காட்டி
காகிதங்களை நீட்டி நீயே அதில்
கவிதையாவாய்.
ஊருக்கும் பெருக்கும் மட்டும்
உருவாய் விட்டுவிட்டு
உனக்கானவனாய் என்
உயிர் மட்டும் மாற்றுவாய்.
இவ்வளவுதானே....
இதையெல்லாம் எப்போது
செய்வதாய் உத்தேசம்??
No comments:
Post a Comment